புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 178 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 7) வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அண்டை மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருவதாகக் கூறிய அவர், நவம்பர் 12ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கடந்த ஆண்டை விட தற்போது டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.