புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், ஜனவரி 2ஆம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த ஆண்டும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அக்கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், ஜனவரி 6ஆம் தேதி போட்டியை நடத்த திட்டமிட்டனர்.
இந்த நிலையில், நாளை தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்து இன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் தச்சங்குறிச்சி கிராம மக்களும், புதுக்கோட்டை மாவட்ட மக்களும் உற்சாகமடைந்தனர்.
தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஏற்கனவே செய்து முடித்துள்ள நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் காளைகள் பதிவு மற்றும் வீரர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஜன.16ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு - பூஜையுடன் தொடங்கிய பணிகள்