புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தெற்குப் பகுதியான மிரட்டுநிலை, பெருங்குடி, கடையக்குடி, அரிமழம் ஆகியப் பகுதிகளில் காலம் காலமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால், வறட்சியால் விவசாயிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு போதும் என்கிற அளவிற்கு மழை பெய்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் விவசாயம் செய்து, தற்போது அறுவடை முடித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பெருங்குடியைச் சேர்ந்த விவசாயிகள், ' இந்த ஆண்டு பெய்த மழையில், ஊரில் உள்ள குளங்கள், கால்வாய்கள் என அனைத்தும் நிரம்பியுள்ளது. அதனால் குறுகிய காலத்திலேயே முதல் அறுவடையை முடித்து, மீண்டும் நெல் விதைத்து இருக்கிறோம். 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்கிறார்கள்.
இதை அரசாங்கம் சற்று உயர்த்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். அதே போல, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மானிய விலை என சலுகைகளை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மழை வந்தாலும் சரி, வெயில் வந்தாலும் சரி பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். இதனை அரசு உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம்.
இந்த ஆண்டு விளைச்சல் தந்து இருந்தாலும் அதிக லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால், நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது' என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு