புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரண்டு விசைப்படகு மீன்பிடி தளங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புயலின் தாக்கம் குறைந்துள்ளது.
இதனையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், ஆறு நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பாஸ்போர்ட் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரிவானுல்லா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அபு மன்சூர், இப்ராகிம், அஹமது, கணேசன் உள்ளிட்ட 5 பேரும், அதேபோல டிக்கர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற முனியசாமி, செந்தூரபாண்டி, அருள், தன்ராஜ் ஆகிய 5 பேரும், அதேபோல் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 14 மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 14 பேரையும் கைது செய்ததோடு, அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்கவும், பறிமுதல் செய்த படகை மீட்டுத் தரவும், இந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?