புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள பொதியகோன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த நண்பர்களான கோவிந்தராஜ், சதிஷ், ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் படித்து கொண்டே வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றும், கிடைக்கும் அந்த வருமானத்தில் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
இதற்கு முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்வது என்று நான்கு பேரும் கூடி விவாதித்த போது நுங்கு விற்பது என்ற யோசனை தோன்றியது. தற்போது கோடைக்காலம் என்பதால் நுங்கு விற்பனையில் தங்களின் கடின உடல் உழைப்பை தந்தால் கண்டிப்பாக தகுந்த கூலி கிடைக்கும் என்று நான்கு நண்பர்களும் முடிவு செய்தனர்.
இதனையடுத்து நான்கு பேரும் காட்டுப் பகுதியில் வளர்ந்து நிற்கும் எவர் ஒருவரின் உதவியில்லாமல் பனை மரத்தில் ஏறி நுங்குகளை பறித்து அதை சைக்கிள் கட்டிக் கொண்டு வந்து விராலிமலை - கீரனூர் சாலையோரம் தங்கள் ஊருக்கு அருகே வைத்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நுங்கு வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தை நான்கு பேரும் பிரித்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் தனக்காக எதுவும் செலவு செய்து கொள்ளாமல் தங்களுடைய தாய், தந்தையை நினைத்து குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த வருமானத்தை அன்று மாலையே தாயிடம் அப்படியே கொடுத்து விடுகின்றனர்.
இது போன்று படிக்கும் காலத்தில் தொழில் செய்ய விரும்பி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் குடும்பத்திற்கு செலவழித்து வரும் இந்த மாணவர்களின் செயலை அறிந்து அவ்வழியே வரும் சில வழிப் போக்கர்கள் கவனத்தில் கொண்டு அவர்களிடம் பேரம் பேசி நுங்கு வாங்கினாலும் விலை பேரம் பேசுவதில்லையாம்.
கிடைக்கும் விடுமுறை நாட்களை இந்த தொழிலுக்கு நாங்கள் பயன்படுத்திக் கொண்ட போதும் படிப்பிலேயே தங்கள் முழு கவனமும் செலுத்தப்படுவதாக கூறுகின்றனர் இந்த எதிர்கால தொழிலதிபர்கள். வளர்ந்து வரும் அறிவியல் நாகரீக வளர்ச்சியில் கைபேசியை பயன்படுத்தி சில மாணவர்கள் இணையதள விளையாட்டிற்கு அடிமையாகின்றனர்.
ஆனால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களால் முடிந்த நிலையான வருமானத்தை குடும்பத்திற்காக ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை தாங்கிக் கொண்டு சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனையில் ஈடுபடும் இந்த மாணவர்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என கூறும் பொதுமக்கள் அதே நேரத்தில் சிறுவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் வளர வேண்டும் என வாழ்த்துக்கூறிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: மலர்ந்த காதலால் உயர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கை - புதுக்கோட்டையில் ஒரு காதல் கோட்டை!