தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனைக்கேட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்ததால், அந்த புத்தகங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. மூன்றையும் சேர்த்து ஒரே தேர்வு எழுத வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயம். மேலும், படி படி என்று வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசிரியர்களும் தங்களை கொடுமை செய்வதாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மனமில்லாமல் படி படி என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதனால் தமிழக அரசின் ரத்து செய்த நடவடிக்கை தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்து என்னவெனில், என்னதான் பொதுத்தேர்வை ரத்து செய்வது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையானது நாட்டிற்கு மிகவும் அவசியம், அந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் புதிய திறன்களை உருவாக்கக்கூடியதுமாக இருக்க வேண்டும். அதனால் இந்த பொதுத்தேர்வு ரத்து செய்தாலும் பாடத்திட்டங்களில் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆண்டின் தொடக்கத்திலேயே முறையாக கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்...