தை மூன்றாம் நாளான இன்று நாடு முழுவதும் காணும் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று கண்டு ரசித்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்குப் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய குடைவரை ஓவியம் சித்தன்னவாசலில்தான் உள்ளது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் இங்கு அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு கஜா புயலில் ஏற்பட்ட தாக்கத்தினால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாக இருந்தது. அதோடு சித்தன்னவாசலை சுற்றியுள்ள இயற்கை எழிலும் குறைந்திருந்தது.
ஆனால் இந்த ஆண்டு தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை சித்தன்னவாசல் பராமரிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி நிறைய மரங்களை நட்டு, பூங்காக்களை பராமரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்குக்காக படகு சவாரி, தண்ணீர் நடனம் என அனைத்து சிறப்பம்சங்களும் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சித்தன்னவாசல் குறித்து புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், முதன்முறையாக நேரில் கண்டு ரசிப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது. இப்பகுதியில் பராமரிப்பு பணிகள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
"சிதைந்து வரும் சித்தன்னவாசல்... பாதுக்காக்கப்படுமா?" - வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை