புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பகத்து வான் பட்டி கிராமத்தில் உள்ள தாமரைச்செல்வன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் உத்தரவின்பேரில் வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நேற்று ( ஏப்.21) அந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் மூன்று சிறுவர்கள் உள்பட ஏழு பேர் கொத்தடிமைகளாக அங்கு வேலை பார்ப்பது தெரியவந்தது.
ஏழு பேரிடமும் செய்த விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், முப்பதாயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கந்தர்வ கோட்டை பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த ஆறு மாத காலமாக இருந்து வருவதாகவும், அங்கு கரும்பு தோட்டத்தின் உரிமையாளர் பல்வேறுவிதமான துன்புறுத்தல்களை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட அலுவலர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அந்த ஏழு பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அங்கு என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கூறுகையில், அந்த ஏழு பேருக்கும் அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களது சொந்த மாவட்டமான திருவண்ணாமலைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு உதவிகளும் அவர்களுக்கு செய்யப்படும். இது குறித்து வழக்கு தொடரப்பட்டு கரும்புத் தோட்டத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!