புதுக்கோட்டை: இறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
கடந்த 105 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இறையூர், வேங்கைவயல், காவேரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதக் கழிவுதான் என்பது உறுதியானது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏற்கனவே 3 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் இன்று (மே 6) வேங்கைவயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் வேங்கை வயல் பகுதியில் உள்ள மலம் கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், தமிழ்நாடு அரசால் அந்த பகுதி மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மலம் கலக்கப்பட்டதற்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிலை எப்படி இருந்தது, அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரின் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
இதையும் படிங்க: வேங்கைவயல், இறையூர் கிராமங்களில் சாட்சிகளிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை!