புதுக்கோட்டை: கல்யாணராமபுரம் இரண்டாம் வீதியைச் சேர்ந்தவர், பாஸ்கரன். அரசு பணியாளரான இவர், அபார்ட்மென்ட் ஒன்றில் மனைவி கிருத்திகா தேவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார். இதே அபார்ட்மென்டில் வசித்து வந்த ஹசன் முகமது, வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு பணத்துக்காக பாஸ்கரின் மனைவி கிருத்திகா தேவி அணிந்திருந்த தங்கச் செயினை கத்தி முனையில் பறிக்க முயன்றுள்ளார். அப்போது கிருத்திகா தேவியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹசன் முகமது, டியூப் லைட்டை உடைத்து, தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். மேலும், கிருத்திகா தேவியின் கணவர் இது குறித்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து ஹசன் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில், இன்று (ஜன.30) புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், குற்றவாளி ஹசன் முகமதுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக்கேட்டதால் தாக்குதல்!