புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் மே 9ஆம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா மே 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மண்டகப்படிதாரர்கள் நிகழ்வாக நடைபெறும். அதை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த நாளில் சாமி ஊர்வலம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி திருவரங்குளத்தில் தொடங்கி வம்பன் வீரமாகாளி அம்மன் கோயிலில் கொண்டுபோய் வைக்கப்பட்டு, அங்கு மண்டகப்படிதாரர்கள் வந்து கடவுளை வணங்கி அருள் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதில் ஒருதரப்பினர் தங்களுக்கு மட்டும்தான் சாமிக்கு பணிவிடைகள் செய்ய உரிமை உள்ளது என்றும், மற்றவர்களுக்கு சாமியை வணங்கி செல்லலாம் என்று கூறினர். இதனால் இருதரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அதைக் காரணம் காட்டி 2018ஆம் ஆண்டு சிறப்பு விழாவான இரண்டாம் மண்டகப்படிக்கு காவல் துறையிடமிருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் சாமி ஊர்வலம் நடக்கவில்லை.
இந்நிலையில் இந்தாண்டும் சாமி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்குவந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பதாக காவல் துறையினர் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.