புதுக்கோட்டை: இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “படித்த, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள, முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகை 10 லட்சம் ரூபாய்க்கு மேலும் 5 கோடி ரூபாய்க்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம், திட்ட தொகையில் 25 சதவீதம் பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடியினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10 சதவீதம் வழங்கப்படுகிறது.
மானிய உச்ச வரம்பு 75 லட்சம் ரூபாய் கடனை திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
உச்ச வரம்பு பொதுப் பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தனிநபர் மட்டுமின்றி, தகுதி பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மை பங்குதாரர் (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, கார், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ், பஸ், மினிபஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, டிரக், ட்ரெய்லர் போன்றவற்றை வாங்கி, இந்த திட்டத்தின் கீழ் 35 சதவீதம் தனிநபர் மானியமும், கடனை திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3 சதவீத வட்டி மானியமும் பெற்று பயன் பெறலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04322 221794, 98409 61739 மற்றும் 94871 73397 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார்.. மாணவிகள் தற்கொலை முயற்சி!