தமிழ்நாட்டில் தற்போது கரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவிவருகிறது. அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சார் ஆட்சியர் ஆனந்த்மோகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராமு ஆகியோர் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சார் ஆட்சியர் ஆனந்த்மோகன் கூறுகையில், "அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 70 படுக்கை வசதி உள்ளது. இதில் 6 படுக்கைகள் அவசர சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போதுவரை 32 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அதிக கரோனா நோயாளிகள் வரும்பட்சத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அறந்தாங்கி அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் 300 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்னும் இரண்டு வார காலத்திற்குள் பணிகள் முடிவடைந்துவிடும்" எனத் தெரிவித்தார்.