உடையாளிப்பட்டியை அடுத்த கிள்ளுக்கோட்டை செங்கலூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திகேயன். இவருக்கும் இவரது நண்பர்களுக்கும், மதுபானக்கடையில் தகராறு நடந்திருக்கிறது. இதில் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளால், அவரது நண்பர்களை போதையில் திட்டியிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் கிள்ளுக்கோட்டையைச் சேர்ந்த சின்னத்துரை (37). பெரியராசு (43), மூர்த்தி (40), கந்தவேல் (21), ஆகிய நால்வரும் சேர்ந்து கார்த்திகேயனை விரட்டிச் சென்று குருந்தனூரணி அருகில் உள்ள நொண்டி முனியன் கோயிலருகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து செங்கலூரைச் சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில், உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி, குற்றவாளிகள் நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனடிப்படையில் நால்வரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: இளம்பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை!