புதுக்கோட்டை: காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (65). இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தவர். இவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு உணவு உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுப்பது, மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(ஜன.19) இரவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவருடைய ஓய்வு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை (ஜன.20) மருத்துவனை ஊழியர்கள் சென்று பார்த்தபோது அறையில் நாகரத்தினம் சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு சோதனை செய்ததில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில், மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் சென்று நின்று விட்டது. இதையடுத்து காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நாகரத்தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கீழ்பவானியில் அறுவடை பணி தாமதம் - நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கவலை