புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கு அரசு ராணியார் மருத்துவமனை பிரசவத்துக்கான புகலிடமாக உள்ளது. கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பிரசவப் பகுதியும் புதுப்பிக்கப்பட்டு தாய்-சேய் நல கட்டிடம், அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொது மக்களின் நலனுக்காகவும், வசதிக்காகவும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட தாய்-சேய் நல மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் பிரசவங்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 2019-ஆம் ஆண்டில் 5,590 ஆக இருந்த பிரசவங்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு அக்டோபர் கணக்கின்படி 7,777-ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 5-மாதங்களாக மகப்பேறு மரணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு மட்டுமே சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 51 கர்ப்பிணிப் பெண்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சையால் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இது மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை என்பதனால் பிற மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 17 தாய்மார்களும் இதில் அடங்குவர். அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களில் 50-60 சதவிகிதத்தினர் மிக அபாயகரமான நிலையில் (இரத்த சோகை, இரத்த கொதிப்பு மற்றும் வலிப்பு, நாள்பட்ட கர்ப்பம்) அழைத்துவரப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக சீரிய முறையிலான அசாத்தியமான, சிறப்பான உயர் தரமான சிகிச்சை தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இம்மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் பல பச்சிளம் குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பெற்று நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மு.பூவதி கூறுகையில், "அரசு ராணியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டில் மட்டும் 7,777 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளது. பிற மருத்துவமனைகளில் இருந்து மிகுந்த ஆபத்தான நிலையில் பரிந்துரைக்கப்பட்டும் ராணியார் மருத்துவமனையில் நடைபெற்ற பிரசவங்களில் கடந்த ஐந்து மாதங்களில் ஒரு மகப்பேறு மரணம் நிகழா வண்ணம் (0%) சிறந்த முறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சையளித்து வருவது பாராட்டத்தக்கது" என்றார்.
மேலும், "மகப்பேறு மட்டுமின்றி கர்ப்பப்பை சம்பத்தப்பட்ட (Gynaecology) நோய்களுக்கும் அதிநவீன அறுவை சிகிச்சை அளிக்கும் வகையில் லாப்பரோஸ்க்கோப் (laparoscope) மற்றும் ஹிஸ்டி ரோஸ்க்கோப் (hysteroscope) போன்ற விலை உயர்ந்த அறுவை சிகிச்சை உபகரணங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு இவ்வகை சிகிச்சை முறைகளால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர். எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெற்று செல்லும் வகையில் மக்கள் நல சேவையில் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மருத்துவமனையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில சிக்கலான சிசு மற்றும் பிரசவ மரணங்கள் நிகழும்போது அதை மிகைப்படுத்தி தகவல் பரப்புவதால் பொது மக்களுக்கு உயரிய நோக்கத்துடன் செயல்படும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை குறைந்து விடும் என்றும் பொதுமக்கள் அத்தகைய வதந்திகளை நம்பாமல் அரசு மருத்துவமனையில் உள்ள உயர்தர சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என மருத்துவமனை முதல்வர் மு.பூவதி கூறினார்.
இதையும் படிங்க: 'ரஞ்சிதமே' பாட்டுக்கு அசத்தல் நடனமாடிய கலெக்டர் கவிதா ராமு!