புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் நெல் அரவை மில்களில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல் இங்குதான் அரவைக்காக வழங்கப்படும்.
இந்த ஆய்விற்கு பின் பேசிய மாவட்ட ஆட்சியர், "பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நடப்பு குறுவை சாகுபடியில் 36,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை மாவட்டத்திலுள்ள 17 நெல் அரவை முகவர்களின் மில்களில் அரவைக்கு வழங்கப்பட்டு அந்த அரிசியினை நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.