புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்புப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மிரட்டுநிலை கிராமத்தில் ஒரு நபருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டவுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளது.
1.50 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை போன்ற பெரு நகரங்களில், இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது மிகவும் சவால் ஆனதாகும்.
எனினும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு