புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்காம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 10 நாள்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டு புதிய புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்று பல்வேறு துறையிலிருக்கும் முக்கியப் பிரமுகர்களான திருநாவுக்கரசர் சகாயம் ஐஏஎஸ், இயக்குநர் பாண்டிராஜ் பாடலாசிரியர் யுகபாரதி, பேச்சாளர் சுல்தான் பேகம், வைகைச்செல்வன் போன்றவர்கள் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கடந்த வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியில் 85 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின. அதைத் தொடர்ந்து இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் இலக்கு என திட்டமிடப்பட்டு அந்த இலக்கு தற்போது நிறைவடைந்து புத்தகத் திருவிழாவும் இன்றுடன் நிறைவடைந்தது.
இது குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் முத்துநிலவன் கூறுகையில், "இந்தச் சமூகத்தில் புத்தகங்கள்தான் மிகவும் முக்கியமாகிறது; அதனை வளர்ப்பதும் புத்தகங்கள்தான். இந்தாண்டு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி இருக்கிறது.
எங்களது நோக்கம் குழந்தைகளைக்கூட புத்தகத்தை எடுத்துப் படிக்கவைக்க வேண்டும் என்பதுதான். அதேபோல இந்த வருடம் குழந்தைகள் நிறைய புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இந்தப் பத்து நாளில் கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்த்துச் சென்றனர். பொதுமக்களும் நல்ல வரவேற்பை தந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
மதன் என்ற வாசகர் கூறுகையில், "நான் இந்த வருடம் 3000 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கினேன். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் டிஸ்கவுண்ட் செய்துகொடுத்தார்கள். புத்தகங்களில் உள்ள வரிகளை வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து வாழ்ந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு