புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கு, சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. வாழ்வதற்குத்தான் போராட வேண்டும் என்றால், இறந்த மனிதனை புதைப்பதிலும் போராட வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இறந்தவரை அடக்கம் செய்ய சரியான சாலை வசதி இல்லாததால் குளத்தில் பிரேத உடலைச் சுமந்து செல்கிறோம். சில நேரங்களில் குளம் நிரம்பிவிட்டால் நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வோம்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. வெள்ளையர்கள் ஆட்சியில் கூட இப்படி ஒரு துன்பத்தை அனுபவித்திருப்போமா என்பது தெரியவில்லை. சமூக நீதி பேசுவோரின் செயல் வாய்ப் பேச்சாகத்தான் இருக்கிறது. வாழத்தான் வழயில்லை இறந்துபோகும்போது நிம்மதியாக புதைக்க விடுங்கள்" என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: