புதுகோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஏ.எல் மீனாட்சி சுந்தரம் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வைத்தூரில் இடி தாக்கி நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 31 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மிக சிறந்த முறையில் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, விரைவில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டு புத்தகங்களை மருத்துவக் கல்லூரியின் சார்பாக வழங்கியிருக்கிறோம் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், காய்ச்சல் பாதிப்பால் இந்த மாதம் 129 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு என்றே பிரத்யேகமாக மூன்று வார்டுகள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு சிறந்த முறையில் மருத்துவம் பார்த்து வருகிறோம். நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், நிலவேம்பு காசாயம், அரிசி கஞ்சி, உப்புக் கரைசல் உள்ளிட்ட அனைத்தும் அந்தந்த வார்டுகளிலேயே வழங்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் கொசுவலை அமைக்கப்பட்டு நோயாளிகளை பாதுகாத்து, அவர்கள் நலமுடன் திரும்பும் வரை சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு மருத்துவர்களுக்கு, காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு முறையாக மருத்துவம் பார்க்கப்படுகிறது.
இந்த மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நாள்தோறும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துமனைகளை அணுகுவது மிகவும் அவசியம். மேலும், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருத்தியமைக்கப்பட்டத் தேர்வுத்திட்டம் வெளியீடு!