மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நேற்று (பிப். 24) புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள துணைக்கோள் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:
இந்தத் துணைக்கோள் நகரம் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இதில் உயர் வருவாய் பிரிவில் 339 மனைகள் ஒவ்வொன்றும் தலா 2, 711 சதுரடி பரப்பளவிலும், மத்திய வருவாய் பிரிவில் 280 மனைகள் தலா 2, 325 சதுரடி பரப்பளவிலும், குறைந்த வருவாய் பிரிவில் 218 மனைகள் தலா 1, 453 சதுரடி பரப்பளவிலும், பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில் 766 மனைகள் தலா 431 சதுரடி பரப்பளவிலும் என மொத்தம் 1,603 வீட்டு மனைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் துணைக்கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு 80 அடி, 60 அடி, 40 அடி அகல தார்ச்சாலைகள், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு வசதி, பள்ளி மனை, வணிக மனைகள், பொது உபயோக மனை, பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மனைப் பிரிவாக அமைக்கப்பட உள்ளது.
மேலும் இத்துணைக்கோள் நகரம் - பேருந்து நிலையம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும், தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-காரைக்குடி சுற்றுச் சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள சிறந்த மனைப்பிரிவாகும்.
எனவே பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள துணைக்கோள் நகரப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.