ரத்தமின்றி நமது உடல் செயல்படாது. நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். உடலின் 'ஆல் இன் ஆல்'-ஆக நம் ரத்தம் செயல்படுகிறது. ரத்த தானம் செய்வதால் பெறுபவருக்கு மட்டும் பலன் அல்ல; ரத்த தானம் செலுத்துபவருக்கும் பலன் தான். ரத்ததானம் செலுத்துவதால் நமது உடலில் இயற்கையாகவே புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் இரும்புச்சத்து சமன் செய்யப்பபடும்.
ஆனால், கரோனா தொற்று காரணமாக ரத்த தானம் செலுத்துவதற்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம், அதாவது கரோனா ஊரடங்கிற்கு முன் வரை வருடத்திற்கு 2 ஆயிரம் ரத்தக் கொடையாளர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். ஆனால், ஊரடங்குக்குப்பின் கரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தினால் ரத்த தானம் செய்வதற்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதனால் கரோனாவுக்கு முன்-பின் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் 50 விழுக்காடு ரத்தக் கொடையாளர்கள் ரத்த தானம் செய்வது குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாதத்திற்கு 400 முதல் 500 யூனிட் ரத்தம் தொடர்ச்சியாக கிடைத்து வந்த நிலையில், தற்போது குறைந்தது 150 யூனிட்டை எட்டுவதே கடினமாக இருக்கிறது என்று ரத்த வங்கி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பூவதி கூறும்போது, 'கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 28 நாள்களுக்குப் பிறகு, தாராளமாக ரத்த தானம் கொடுக்கலாம். மேலும் ரத்த தானம் கொடுக்க வருபவர்களுக்கு முழுப்பாதுகாப்புடன் மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, ரத்தம். அதனை தானம் செய்ய மக்கள் அஞ்சக் கூடாது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய மாதத்தில் 6 ரத்த தான முகாம்கள் வரை நடத்த முடிந்தது.
ஆனால், தற்போது முகாம்கள் நடத்துவதற்கு தகுந்த இடைவெளி ஒரு குறையாக இருக்கிறது. இருப்பினும் கூட, கடந்த ஆண்டு ரத்த வங்கியில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் கொடையாளர்களிடமும் தொலைபேசி மூலம் அழைத்து ரத்த தானம் கொடுப்பதற்கு, ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை, தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரத்த பிளாஸ்மாவினை எடுத்து மற்றொரு கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன முறை, இன்னும் சில நாள்களில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கும் வர இருக்கிறது.
ரத்தக் கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும்கூட நிறைய சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ரத்தக் கொடையாளர்களை வரவழைக்கிறோம்.
மற்ற மாவட்டங்கள் ரத்தப்பற்றாக்குறை என எங்களை அணுகினால் கூட, எங்களால் முடிந்தவரை ரத்தத்தைப் பகிர்ந்து அளிக்கக்கூடிய அளவிற்கு பற்றாக்குறை இல்லை என்று கூறலாம். தற்போது இங்கு 500 யூனிட் ரத்தம் இருப்பில் உள்ளது. மக்கள் யாரும் ரத்த தானம் வழங்க தயங்க வேண்டாம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
முயற்சிக்கு முதிர்ச்சியில்லை; தற்காப்புக் கலைகளில் தேர்ந்த முதியவர்!