புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள விளாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி திவ்யா(19). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் (நவ.20) நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துக்குழுவினர், புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து 108 ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். ஆம்புலன்சில் புதுக்கோட்டை நோக்கி சென்றபோது பிரசவ வலியால் துடித்த திவ்யாவிற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் திவ்யாவிற்கு பெண்குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமான நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பைலட் தேவபாஸ்கரனிடம் கேட்டபோது, பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது.
இலுப்பூர் ஆம்புலன்ஸில் மட்டும் இந்த ஆண்டு பத்துக்கும் அதிகமான பிரசவ சிகிச்சை அளித்து தாய் சேயை காப்பாற்றியுள்ளோம். நேற்றிரவு பிறந்த குழந்தை 2.650 கிலோ எடை இருந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தாய், சேய் இருவரையும் பாதுகாப்புடன் உயிருடன் சேர்த்த பைலட் தேவபாஸ்கரன், மருத்துவ உதவியாளர் பூபதிராஜா ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பாஜக ஆட்சியை குற்றம்சாட்டுவது சரியானது அல்ல'