புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் துரை குணா(41). இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் மிகுந்தவர். கடந்த ஆண்டு நடிகர் வடிவேலு பாணியில், குளத்தை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்து தருமாறும் உயர்மட்ட அலுவலர்களுக்கு மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றக்கோரி வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக, வருவாய் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து கோரிக்கை விடுத்த இவர், வருவாய் துறையினர் அலட்சியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "வரும் 28ஆம் தேதி கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனி நபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டுதல கட்டடங்களை வருவாய் (நி.மு. 6(2) துறை, அரசாணை (நிலை) எண் 437-இன் படி அகற்றுவது எப்படி? என்று ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு எடுக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கான இந்த பயிற்சி வகுப்பில் குறிப்பேடுக்க நோட்டு, பேனா, கையேடு, மதிய உணவு, டீ, வடை, பயணப்படி ஆகியவை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தகுந்த இடைவெளியை உறுதிப்படுத்தி முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியிருந்தார்.
பின்குறிப்பில், எங்களிடம் 100 விழுக்காடு வெற்றி உறுதி என்றும் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரே கைராசி நிறுவனம் என்று குறிப்பிட்டிருந்ததும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பாதுகாப்பான அரங்கில் பயிற்சி நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்ததும் மேலும் நகைப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலறிந்த கறம்பக்குடி காவல்துறையினர் துரை குணாவை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்