புதுக்கோட்டை: கறம்பக்குடி தாலுகா, வாணக்கன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வாண்டான்விடுதி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'பீர் குடிக்கும் போட்டி' நடைபெற உள்ளதாக போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த போட்டியின் நுழைவு கட்டணமாக ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும், 36 நபர்கள் மட்டும் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பீர் குடிக்கும் போட்டிக்கு பரிசு: மேலும், 60 நிமிடத்தில் 10 பீர் அருந்தும் நபருக்கு முதல் பரிசாக 5 ஆயிரத்து 24 ரூபாயும், 9 அரை பீர் அருந்தும் நபருக்கு இரண்டாவது பரிசாக 4 ஆயிரத்து 24 ரூபாய் பரிசு உட்பட 4 இடங்களைப் பிடிக்கும் நபர்களுக்கு பரிசுத் தொகைகளை அறிவித்திருந்தது.
குமட்டல், வாந்தி எடுத்தலில் ஈடுபடும் நபர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் குடித்த பீருக்கு பணம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக, போட்டியில் பங்கு பெறும் நபர்களுக்கு மீன் வறுவல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போஸ்டர் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இத்தகைய போட்டிகள் சமூகத்தை சீர்குலைக்கும் வண்ணம் நடத்தப்படுவதாக மக்கள் தரப்பில் கருத்துகள் எழுந்தன.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் வந்தே பாரத் வாராந்திர ரயில் சேவை துவக்கம்..! பயணிகள் உற்சாகம்..!
இதனிடையே நேற்று (ஜன.4) இது குறித்து மேலும் ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாண்டான்விடுதியைச் சேர்ந்த பெ.கணேசமூர்த்தி, தான் இந்த பதிவை பதிவிட்டதிற்கு வருந்துவதாகவும், அது விளையாட்டுத்தனமாக பதிவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நபர் வெளியிட்டிருந்த பதிவில், "தயவு செய்து இதை யாரும் அரசியல் காரணங்களுக்கோ அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம். மேலும் யாரும் இதை சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்ய வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இது போன்ற போட்டிகளுக்கு அனுமதி இல்லை என்றும், சமூகத்தை கேடுவிளைவிக்கும் இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிறைக் காவலர்களைத் தாக்கிய 2 நைஜீரிய பெண் கைதிகள்..! புழல் சிறையில் பரபரப்பு..!