புதுக்கோட்டை நகர் பகுதிக்குட்பட்ட திருக்கோகர்ணம் மேலமேட்டு தெருவைச் சேர்ந்தவர், முத்துக்குமார். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகன் வெங்கடேஷ் குமார் (25). இவர் 2021ஆம் ஆண்டு புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ‘மேக்ஸ் கேப்பிட்டல்’ என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அந்த நிறுவனம் மூலம் புதுக்கோட்டை, சென்னை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களை வெங்கடேஷ் குமார், அவரது தாயார் உமா மகேஸ்வரி உடன் நேரில் சந்தித்து தான் டிரேடிங் செய்வதாகவும்; டிரேடிங் செய்வதற்கென்று தனியாக குழுவைத்து நடத்தி, அதன் மூலம் டிரேடிங் செய்து நல்ல லாபம் ஈட்டி வருவதாகக் கூறி வந்துள்ளார்.
மேலும், தன்னிடம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், கொடுக்கும் தொகைக்கு மாதம் மாதம் ஐந்து விழுக்காடு முதல் எட்டு விழுக்காடு வரை லாபம் தருவதாகவும்; ஓராண்டில் உள்ள 12 மாதங்களில் 10 மாதங்கள் லாபத் தொகையும் ஒரு மாதம் தொகை இல்லாமலும் 12ஆம் மாதம் முதலீடு செய்த மொத்த தொகையையும் கொடுப்பதாக ஆசை வார்த்தைக் கூறி உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் நம்ப வைத்து அவர்கள் மூலமாகவும் பலரிடமும் பணம் பெற்றுள்ளார்.
சுமார் 120 நபர்களுக்கு மேல் பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்ற வெங்கடேஷ் குமார், புதுக்கோட்டையில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். மேலும், பணத்தைப் பெற்ற சிலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் அவர்கள் கொடுத்த தொகைக்கான லாபத்தை கொடுத்துவிட்டு, மேலும் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ஒரு விழாவை ஏற்பாடு செய்து 2 லட்சம் ரூபாய்க்கு மேல் உடனடியாக முதலீடு செய்தால், அவர்களுக்கு தங்க நாணயம், எல்இடி டிவி உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
அதனை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு தங்க நாணயமும், டிவியையும் உடனடியாக வழங்கியுள்ளார். இதனால், வெங்கடேஷ் குமார் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த பலரும் அவர்களுக்கு தெரிந்த நபர்களையும் அறிமுகம் செய்து அவர்களிடமும் பணம் பெற்று வெங்கடேஷ் குமாரிடம் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் குமார் முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தொகை கொடுக்காமலும் தொலைபேசியை எடுக்காமலும் நேரில் சந்தித்தாலும் முறையாக பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கீழ இரண்டாம் வீதியில் வைத்திருந்த அந்த நிறுவனத்தையும் காலி செய்து விட்டுச் சென்றுள்ளார். இதனால் வெங்கடேஷ் குமாரின் ஆசை வார்த்தையை நம்பி, முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். திரும்பத் திரும்ப வெங்கடேஷ் குமாரை அணுகும்போது, அவர் முறையாகப் பதில் தெரிவிக்காத நிலையில் பணம் கேட்பவர்கள் மீது காவல் நிலையத்தில், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் வெங்கடேஷ் குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், வெங்கடேஷ் குமாரை புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், திருச்சியில் வைத்து, அவரை பிடித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, வெங்கடேஷ் குமாரிடம் ஏமாந்த நபர்கள் கூறுகையில், ''தமிழ்நாடு அரசும் காவல் துறையினரும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் பவ்வேறு வடிவில் பணம் ஈட்ட நினைத்து இவ்வாறு மோசடிகளை நம்பிவிடுகிறோம். வெங்கடேஷ் குமார் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, அவரிடம் பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து தற்பொழுது ஏமாந்துள்ளோம்.
அவர் டிரேடிங் செய்து ஐந்து விழுக்காடு முதல் எட்டு விழுக்காடு வரை லாபத்தொகை தருவதாகவும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தாலும் இந்த வட்டித் தொகை கிடைக்காது, நான் கூடுதல் லாபத்தொகை தருகிறேன் என்று தனது தாயாருடன் ஒவ்வொரு நபரின் வீட்டிற்கும் நேரில் சென்று குடும்பத்தில் ஒருவரை போல் பழகி, ஆசை வார்த்தைக் கூறி பலரிடமும் இந்த ஏமாற்று வேலையை செய்துள்ளார்.
வெங்கடேஷ் குமார் டிரேடிங் செய்து அவர் பணத்தை ஏமாந்தாரா அல்லது இவரே பணத்தை பதுக்கி வைத்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாரா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி, தாங்கள் வெங்கடேஷ் குமாரிடம் கொடுத்த பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பலரும் கடன் பெற்று வருமானத்தை ஈட்ட வெங்கடேஷ் குமாரிடம் பணத்தைக் கொடுத்துள்ளோம்.
3ஆயிரம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கொடுத்துவிட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வரக்கூடிய நிலையில் காவல் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நாடு முழுவதும் டிரேடிங் என்ற பெயரில் பலரையும் பல கும்பல் தொடர்ந்து ஏமாற்றி தான் வருகிறது.
இதற்கு, காவல் துறை தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இனி இதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சின்ன கல்லு பெத்த லாபம்' ரூ.2 லட்சம் கொடுத்தால் 2 லட்சம்..? - சென்னை பெண்ணிடம் நூதன மோசடி!