புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடந்து முடிந்த தேர்தல் கேள்விக்குறியான ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல்வாதிகளிடையே சிவகங்கை தொகுதியில் எங்கள் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களின் தேவைகளை கேட்டறியும் பணியை தொடங்கி இருக்கிறோம். அதன் மூலம் எங்களது கட்சியை விரிவுபடுத்த முடியும்.
அரசியலுக்கு வருவதாக ரஜினி உறுதி தந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இன்னும் வரவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். நாங்கள் அதைக் குறை சொல்லவே இல்லை. அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். யார் அரசியலுக்கு வந்தாலும் சொல்வதை செய்ய வேண்டும் அதுதான் முக்கியம்.
கலையை கலைஞர்கள் ஒருபோதும் வியாபாரமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். தரம் தாழ்ந்த அரசியலையும் தரம் தாழ்ந்த கலையையும் நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார்.
நாங்கள் நினைத்தால் எந்த நடிகர்களை வேண்டுமானாலும் எங்களது கட்சிக்குள் இணைத்திருக்கலாம். ஆனால் எங்களுடைய நோக்கம் அது அல்ல; விருப்பம் உள்ளவர்களை மட்டும்தான் கட்சியில் இணைக்கிறோம்” என்றார்.