புதுக்கோட்டை மாவட்டம் துவார், துறையூர் உள்ளிடப்பகுதிகளில் கடந்தாண்டு தண்ணீர் பற்றாக் குறையினால் விவசாயம் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால், மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அப்படி வழங்கப்படும் பயிர் காப்பீடு தொகை ஒவ்வொரு ஊர் விவசாயிக்கும் ஒவ்வொரு அளவில் போய் சேருகிறது எனவும், பலபகுதிகளில் பயிர் காப்பீடு தொகை வருவதே இல்லை எனவும் அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், "துவார், துறையூர் பகுதிகளில் பயிர் காப்பீட்டுத் தொகையானது ஒரு சிலருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட ரூ.4000 ரூபாய் மட்டுமே, நிறைய பேருக்கு இத்தொகையும் கூட வரவில்லை. சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கேட்டால் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விட்டது என கூறுகின்றனர் ஆனால் பணம் வந்தபாடில்லை.
காப்பீட்டுத் தொகை வந்தால் தான் அதை வைத்து அடுத்த போக விவசாயத்தை செய்ய முடியும் இல்லையெனில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் கவனம் செலுத்தி முறையான காப்பீடு தொகையை வழங்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: பயிர்காப்பீடு திட்டத்தில் மோசடி: அலுவலர்கள், விவசாயிகள் மீது நடவடிக்கை!