புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்று பகுதிகளில் மணல் அதிகளவு திருடப்படுகிறது. இதற்காக, வருவாய் கோட்டாட்சியர் முதல் வட்டாட்சியர், காவல் துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் வரை எந்த நேரத்திலும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்துவருகின்றனர்.
இதனால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்தந்த பகுதிகளின் காவல் நிலையத்தில் வாகனங்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
அப்படி ஒப்படைக்கப்படும் வாகனங்கள் காவல் நிலையத்தில் கம்பீரமாக வரிசைக்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அந்த வாகனங்களை உரிய அபராத தொகைக் கட்டி அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை எடுப்பதில் சிரமம் இருப்பதால் அந்த வாகனங்களை மீட்பதில் உரிமையாளர்கள் நாட்களை கடத்துகின்றனர். இதன்காரணமாக அன்னாவசால், இலுப்பூர் காவல் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.