புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் தன்னுடைய இடத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்காக கடந்தவாரம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, இடத்தைப் பதிவுசெய்வதற்கு சார்பதிவாளர் சரவணன், பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக செல்வம் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் பீட்டர், தமிழரசன் ஆகியோர் கொண்ட குழு அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாயை அளித்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்ற செல்வம் சார்பதிவாளர் சரவணனிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது அதனைப் பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமார் இடம் வழங்குமாறு சரவணன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமாரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், சார்பதிவாளர் சரவணன், பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோரைக் கையும் களவுமாக கைதுசெய்தனர்,