மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று (மே.10) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தலுக்கிணங்க அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். புதுக்கோட்டையைப் பொறுத்தவரையில், 5 பாதுகாப்பு மண்டலங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 22 கரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கி வருகிறது. மாவட்ட அளவிலான பிற மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் நல்ல பலனை அளிக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் முதல்நிலை பணியாளர்களுக்கு ஜிங்க் வைட்டமின் மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகளுடன் சேர்த்து, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
செவிலியரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணிகள் சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் மருத்துவ உரிய வழிகாட்டுதலின்படி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் 509 பேருக்கு கரோனா - தமிழ்நாட்டில் 7,204 பேர் பாதிப்பு!