புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது தச்சன்வயல் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதுக்கோட்டையின் அருகிலேயே இந்த ஊர் இருந்தாலும்கூட ‘சிட்டிசன்’ திரைப்படத்தில் வருவதுபோல் ‘அத்திப்பட்டி’ கிராமமாகத்தான் இருந்து வருகிறது.
ஏனென்றால், இந்த கிராமத்தில் குடி தண்ணீர் கிடையாது, சாலை கிடையாது, யாரேனும் இறந்து விட்டால் மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை கிடையாது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் எங்கு செல்ல வேண்டுமானாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஊரின் அருகே குண்டாறு செல்வதால் அந்த ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தச்சன்வயல் எனும் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
இதனால், மழை காலம் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் இதே நிலைமைதான் நிலவி வருகிறது. மேலும், அருகில் நெல் அவிக்கும் தொழிற்சாலை இருப்பதால் அதிலிருந்து வரும் கழிவுகள் இந்த ஊரின் அருகே உள்ள ஆற்றில் கலப்பதால் அந்த ஆற்றில் மக்கள் நடந்து செல்லும்போது உடல் நலக்குறைவு, கால்களில் சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது;
நேற்று, இன்று மட்டும் இந்த பிரச்சனை நடைபெறுவதில்லை. காலங்காலமாக இப்படித்தான் நடந்துவருகிறது. ஆம்புலன்ஸ் வருவதற்குக்கூட இந்த ஊரில் வழி கிடையாது. இருசக்கர வாகனம் செல்வதற்குக்கூட சாலை கிடையாது. இந்த கிராமத்தை ஆற்றுநீர் சூழ்ந்து இருப்பதால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டும். ஒரு பாலம்கூட கிடையாது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் ஊரைச் சுற்றி பொதுக் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எதுவுமே கிடையாது. எதுவாக இருந்தாலும் 5 கிலோ மீட்டர் 10 கிலோமீட்டர் தூரம் தள்ளி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. யாரேனும் இறந்தால்கூட ஆற்றைக் கடந்து, குளத்தின் நடுவே கழுத்தளவு தண்ணீரில் உடலை கொண்டுபோய்தான் அடக்கம் செய்ய வேண்டும். இந்த அவல நிலை யாருக்கும் வரக்கூடாது.
மக்களுக்கு நல்லது செய்கிறோம் என வாக்குக் கேட்டு மட்டும் இங்கு வருகிறார்கள். அதன் பின்னர் இங்கு எட்டிக்கூட பார்ப்பதில்லை. எங்களது குழந்தைகள் நிறைய படித்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால், எங்களது ஊரில் விளையாடுவதற்குக்கூட இடம் இல்லை. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியும் சாக்கடையுமாகதான் இருக்கிறது.
குடிநீருக்குக்கூட நான்கு கிலோமீட்டர் தள்ளிச் சென்றுதான் தண்ணீரை எடுத்து வருகிறாம். ஊருக்குள் ஒரு குடி தண்ணீர் பைப் கிடையாது. ஆண்கள் சுற்றி இருக்கும் ஊர்களில் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க செல்வதற்குக்கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது என செய்திகளில் பார்க்கிறோம். ஆனால், எங்கள் ஊரில் ஒரு கழிவறை வசதிகூட கிடையாது.
இது குறித்து, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் எங்கேயாவது போகவேண்டியதுதான் வேறு வழி இல்லை என்கின்றனர்.
நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்டது எனக் கூறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு வேலை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இந்த கிராம மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்!