புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சீனாவில் இருந்து வருபவர்களுக்கு எல்லாம் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அவர்கள் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியே வருகின்றனர். இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும், மத்திய சுகாதாரத் துறை நாள்தோறும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 394 பேர் சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முழு பரிசோதனை செய்யப்பட்டு, பொது சுகாதாரத் துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர் நலமாக இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை உட்பட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டு, தேவையான மருந்துகளுடன் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமோ பீதியோ அடைய வேண்டாம்” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல்!