நாடு முழுவதும் நாளை அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெற இருக்கிறது. அது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அதிகாரிகள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இக்கூட்டத்தில் கரோனா தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் யாருக்கெல்லாம் அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நம் மாநிலத்தை பொறுத்தவரை அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்துவிட்டன. ஒத்திகை நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் நடக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கலந்து கொள்கிறார்.
மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசனை செய்து தான் ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி செயல்பட்டதால் தான் கரோனா பரவலை நாம் குறைக்க முடிந்துள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி தொடர்பாக, உள்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. விரைவில் முதலமைச்சர் இது குறித்து நல்ல முடிவு எடுப்பார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு நல்ல முடிவை தரும்! - திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை!