புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு சார்பில் மூலிகை பயிர் தோட்டம், உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை அம்மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஆய்வில் ஈடுப்பட்டனர்.
கரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டைப் பார்வையிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அங்கு படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டில் 50 படுக்கை வசதிகளும், அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு ஓரிரு நாள்களுக்குள் அதிகப்படியான மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார பணியாளர்களும் நியமனம் செய்யப்படுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமே தற்போதைய சூழலில் கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி. தடுப்பூசி குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். நான், மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து அலுவலர்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டோம்’ என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நிவாரண நிதி வாங்க மக்கள் கூட்டமாக வர வேண்டாம் அமைச்சர் வேண்டுகோள்!