புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை இராணியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறும் முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.
மேலும், விண்ணப்பம் அளிக்கும் பெண்களிடம், குறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும், விண்ணப்பம் அளிப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறுகையில், ”அண்ணாமலை எத்தனை ஊழல் பட்டியல் வெளியிட்டாலும், அந்தப் பட்டியல் திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது. அவரின் நடைபயணம் அரசியல் செய்வதற்காக மட்டுமே தவிர, வேறு ஒன்றுமில்லை.
அண்ணாமலை நடைபயணத்தால் எந்த விதமான மாற்றமும் ஏற்படப் போவது கிடையாது. ராகுல் காந்தி நடை பயணத்தில் எழுச்சி இருந்தது. இவருடைய நடைபயணம் குறித்து பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும், எவ்வளவு கூட்டத்தை சேர்க்கிறார்கள் என்று. அண்ணாமலை நடைபயணம் என்பது அவருக்கு கால் வலிதான் மிச்சமாகும்” என கூறினார்.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் ‘மியான்மர்’.. உண்மை நிலவரம் என்ன?
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நேற்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின், தனது ரகசியங்களை செந்தில் பாலாஜி வெளியிட்டு விடுவார் என்ற பயத்தில்தான் அவரை பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார். மேலும், காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட ஊழல்கள்தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை குடும்ப அரசியல், ஊழலற்ற தமிழ்நாடாக மாற்றவே இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த யாத்திரையானது வெறும் அரசியல் யாத்திரை மட்டுமல்ல, தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்பும் யாத்திரையாகும். மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடியின் தேசியத்தை நிலைநாட்டப் போகிறார்” என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது!