தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்ட மனநலத்திட்ட துறையின் ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கல்லூரி நுழைவு வாயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண், பெண் என இருவருடைய மனநலம் எவ்வாறு இருப்பது என்பது குறித்த விழிப்புணர்வு வண்ணக்கோலங்கள் போடப்பட்டிருந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சந்திரசேகரன் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அலுவலர் கார்த்தி தெய்வநாயகம் செய்திருந்தார். மாணவ-மாணவிகள் கல்லூரியில் பயின்று வெளியே செல்லும் பொழுது, மன அழுத்தத்துடன் இருக்கக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று, மன நலத்தைப் பேணும் வண்ணம் மன அழுத்தத்தைக் குறைக்கும் வண்ணம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும்; வரக்கூடிய சமுதாய வளர்ச்சிக்கும் மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் மாணவ-மாணவிகளுக்கு இந்த மன அழுத்தத்தைப் போக்கும் வகுப்புகள் நடத்தப்படுவதாக கருத்தரங்கில் அறிவுரைகள் வழங்கபட்டன.
கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார். தொடர்ந்து மனநல மருத்துவர் கார்த்தி தெய்வநாயகம் மனநலம் குறித்த கருத்துரை பேசும்போது, ''14 விழுக்காடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 40 நிமிடங்களில் ஒருவர் இறந்து வருகிறார்கள். மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று நலம் அடைய வேண்டும்" எனக் கூறினார்.