புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை(60). இவருக்கு மாதவிடாய் நின்ற பிறகும் கடந்த மூன்று மாதமாக மாதவிடாய் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பர் பத்தாம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலையின் கர்ப்பப்பை வாய் பகுதியில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து நவீன அறுவை சிகிச்சை தேவைப்படும் எனக் கண்டறிந்த மருத்துவர்கள், மயக்க மருத்துவ நிபுணர் மருத்துவர் ரவிக்குமார், உதவி மருத்துவர் பாலசுப்பிரமணியன், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாரதிராஜா, தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் முத்து ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை நியமித்தனர்.
இக்குழுவினர் செப்டம்பர் 26ஆம் தேதி அஞ்சலைக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், நெடுநேரம் இந்த அறுவை சிகிச்சை நடக்கும் என்பதை உணர்ந்தும், அறுவைச் சிகிச்சைக்கு பின் வலி இல்லாமல் இருக்க எபிடியூரல் கத்திடர் என்ற சிறு குழாயை தண்டுவடத்திற்கு அருகில் பொருத்தினர் .
பிறகு நோயாளிக்கு முழு மயக்கம் அளிக்கப்பட்டு லேப்ராஸ்கோப்பி மூலம் ஐந்து துளைகள் மட்டுமே இட்டு அவருடைய கர்ப்பப்பை, சினையம் இடுப்புப் பகுதியில் உள்ள நெறிகட்டிகள் ஆகியவை முழுவதுமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வரும் நோயாளி அஞ்சலை நாளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல உள்ளாதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி கூறுகையில், 'முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதலியவற்றை அறிந்துகொள்வது நல்லது.
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. அஞ்சலை என்பவர்க்கு கர்ப்பப்பை வாய் பகுதியில் மட்டும் அந்த நோய் இருந்ததனால் அவருக்கு முழுமையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது பூரண குணமடைந்து உள்ளார். இந்த அறுவை சிகிச்சை நவீன லேப்ராஸ்கோப்பி கருவிகள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த சிகிச்சை இம்மருத்துவமனையில் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.