புதுக்கோட்டை: கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூடம் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா மகேஸ்வரி, "பொதுமக்கள் முகக்கவசம் இன்றி வெளியே வரக்கூடாது. உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். காவல்துறையினர் மூலம் ஊரடங்கை கடைபிடிப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்கச் செய்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் சித்த மருத்துவப் பிரிவினை மீண்டும் திறப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 11 விழுக்காட்டினர் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும், 58ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் விதிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'ராமநாதபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை!'