புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்தாண்டு அபுதாபிக்குச் சென்று வேலைபார்த்து வந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு திரும்பி ஜனவரி மாதம் திருப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அபுதாபியிலிருந்து இவர் தமிழ்நாடு திரும்பியது அவரது குடும்பத்தாருக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
இதனிடையே திருப்பூரிலிருந்து கடந்த வாரம் தனது சொந்த ஊரான மறமடக்கிக்கு சுரேஷ் சென்றிருக்கிறார். அப்போது, அவரது வீட்டருகில் இருந்தவர்கள் இவர் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார் எனக்கூற இவரது பெயர் தனிமைப்படுத்தப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்படி இவரது வீட்டருகே இருந்த மற்றொரு வீட்டில் ஒரு வாரமாக சுரேஷ் தனிமைப்படுத்தப்பட்டார்.
இன்று அவரது தாயார் உணவு வழங்குவதற்காக கதவைத் தட்டிய போது எந்த பதிலும் சுரேஷிடமிருந்து வரவில்லை. இதன்பின்னர் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதன்பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அபுதாபி, திருப்பூரில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: வெளியில் நடமாடுவோர் குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு!