புதுக்கோட்டை மாவட்டத்தில் எடுக்க வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி பேசினார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் டெங்கு, மலேரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுத்திட, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்திட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பொதுச் சுகாதாரத்துறை ஆகிய துறைகளிலிருந்து 130 அலுவலர்கள் அடங்கிய விரைவு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன:
- குளோரினேற்றம் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஏரி, குளம், குட்டைகளில் உள்ள நீரைக் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.
- குடிநீரை நன்கு கொதிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
- சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும், கழிவறை சென்று வந்த பின்பும் கைகளை சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
- வெளியிடங்களில் வெறும் கால்களுடன் நடக்கக்கூடாது.
- வெளி இடங்களுக்குச் சென்று வந்த பின் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
- வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
- டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய டயர், மண்பானைகள், நெகிழிப் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பயன்படுத்தாத வீட்டு உபயோகப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்
- சுய வைத்தியம், பெட்டிக்கடை, மருந்துக்கடை மருத்துவர் ஆலோசனையின்றி நேரடியாக மருந்து மாத்திரை உட்கொள்ளக் கூடாது
இவையனைத்தையும் கருத்தில்கொண்டு செயல்படுதல் அவசியம்.
5 வயது சிறுவனை காவு வாங்கிய காய்ச்சல்: டெங்குவா? மர்மமா?... அரசு மருத்துவமனையில் அலட்சியம்
மேலும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகள், குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள் மூலம் நீர் மாசுபடுதல் ஆகியன குறித்த புகார்கள் இருப்பின், மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 425 9013 மூலம் ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கும், 04322 221733 என்ற எண்ணில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கும் 24 மணிநேரமும் தகவல் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.