புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பூர் சர்க்கரை ஆலை 20 வருடங்களாகப் பணியில் இருந்தது. இந்தச் சர்க்கரை ஆலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சர்க்கரை கரும்புகளை டன் கணக்கில் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர்.
காலப்போக்கில் சர்க்கரை ஆலை முறையாக இயங்காததால் அதனை நிர்வாகம் இழுத்து மூடியது. இதனால் அங்கு பணிபுரிந்த 100க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் இருந்து வந்த நிலையில் ஏற்கனவே சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆலை நிர்வாகம் மாதம் தினக்கூலி தொகையில் இருந்து எடுக்கப்பட்ட பிஎஃப் தொகை பிடித்தம் செய்து வந்துள்ளது.
தற்போது சர்க்கரை ஆலையை இழுத்து மூடிவிட்டதால் அந்தப் பணத்தை வேலை செய்த பணியாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது அதை நிர்வாகம் வழங்காமல் இருந்துவந்துள்ளது.
இதுகுறித்து ஆலையில் பணிபுரிந்தவர்களிடம் கேட்டபோது, மாதக் கணக்கில் நிர்வாகத்திடம் சென்று கேட்டும் உள்ளே அனுமதிக்காலும் முறையான தகவல் சொல்லாமலும் வருடக் கணக்கில் இழுத்தடித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம் என தெரிவித்தனர்.
ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை பிஎஃப் பணம் பாக்கி இருப்பதால் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பல லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருவது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கி தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க... கரும்பு இனிப்பானது; விவசாயி வாழ்க்கை கசப்பானது