புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காலங்காலமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியான கூட்டணியில்தான் இடம்பெறுகிறது. இனிவரும் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் வாக்குறுதி
அகில இந்திய காங்கிரஸ் மாநில அளவில் காங்கிரஸ் பொறுப்பாளர்களை குறைந்த அளவில் நியமித்து அதிக அளவு அதிகாரம் வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் வளர்ச்சி அடையும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும். ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் அனைத்து கட்சி சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது
தற்போது ரஜினிகாந்த் மக்கள் மன்றம் தலைமையை அவர்கள் விரும்பிய கட்சிக்கு மன்ற உறுப்பினர்கள் செல்லலாம் என்று அறிக்கை விடுத்துள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை சர்வே எடுத்துள்ளோம். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் இடங்கள் கேட்போம். தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பதை உறுதி செய்த பிறகுதான் பேச முடியும்.
சசிகலாவை அதிமுக ஏற்றுக் கொள்ளும்
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக்கொண்டு பின்னால் சென்றுவிடுவார்கள் ” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக சசிகலா தலைமையின் கீழ் செல்லும்- எம்.பி. கார்த்தி சிதம்பரம்