புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பைரவர் கோயிலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் 18 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், மத்தியில் ராகுல் காந்தியும் பிரதமராக வருவார். தற்போது நடைபெறும் பாசிச பாஜக ஆட்சி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நீக்கத்தால் தொழிற் வளர்ச்சி முடங்கி உள்ளது.
மேலும் சிவகங்கை தொகுதியில் வெற்றிப் பெற்றால் இந்த தொகுதிக்கு ஏற்றார் போல் தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு இந்த பகுதியிலேயே வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான் முதல் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.