புதுக்கோட்டை: தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளை திடீரென உயிரிழந்ததால், காளை மாட்டிற்கு பிளக்ஸ் வைத்து பாரம்பரிய முறைப்படி ராஜமரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்திலேயே அதிக அளவு ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிகப்படியான ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.
மேலும், கவுரவத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி பாதுகாக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளையை லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வளர்த்து, பராமரித்து, ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அதனைதொடர்ந்து, தங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் போன்று அந்த காளைக்கு பெயர் வைத்து, அதன் மீது அதிகப்படியான அக்கறை செலுத்தி, ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடவும், பாய்வதற்கும் வருடம் முழுவதும் அதற்கான நேரத்தையும் ஒதுக்கி பல்வேறு பயிற்சிகள் அளித்து வளர்க்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி என்பவருக்கு சொந்தமான கருப்பு என்ற ஜல்லிக்கட்டு காளை தமிழகத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், கருப்பு ஜல்லிக்கட்டு காளை திடீரென இன்று (ஆகஸ்ட் 24) காலை உயிரிழந்தது. கருப்பு காளை இறந்தது அந்த குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இறந்த ஜல்லிக்கட்டு காளை உடலை, குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மலர் மாலை அணிவித்து, ஒவ்வொருவராக மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு நடத்தினர். மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் இறந்த கருப்பு காளைக்கு ஜேசிபி வாகனம் மூலம் குழி வெட்டி, கருப்பு காளை வளர்த்த குடும்பத்தினர், ஊரார்கள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் முன்னிலையில் காளை அடக்கம் செய்யப்பட்டது. தமிழர்கள் ஜல்லிக்கட்டு காளையை தங்கள் வீட்டின் ஒரு நபராக வளர்த்து வரும் நிலையில் திடீரென காளை இழப்பு ஈடு செய்ய முடியாத சோகத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது...? இஸ்ரோ கொடுத்த அதிரடி அப்டேட்!