புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் கரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம் மொய் விருந்துகள் நடத்த முடியாமல் நிறுத்திவைக்கப்பட்ட மொய் விருந்து 30 பேர் இணைந்து நேற்றைய முன்தினம் (பிப். 7) நாடியம்மன் கோயில் திடலில் நடத்தினார்கள்.
ஒவ்வொருவரும் சுமார் ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரை மொய் வசூல்செய்தனர். இந்த மொய் விருந்தில் வெளிநாட்டில் வேலை செய்துவரும் அதே ஊரைச் சேர்ந்த பாலவேலாயுதமும் இணைந்து நடத்தினார். பாலவேலாயுதம் வெளிநாட்டில் இருப்பதால் மொய் விருந்து நிகழ்ச்சியில் அவரது மனைவி விக்டோரியா, அவரது மகன் லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு மொய் வசூல்செய்தனர்.
மொய் விருந்து முடிந்து மொய்ப்பணம் எண்ணி கணக்கிடப்பட்டு மொத்தச் செலவு தொகையை அனைவரும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பணத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் நிலையில், அங்கு பாலவேலாயுதத்தின் தாய், பேரக்குழந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் வந்து தங்களுக்கு கிடைத்த மொய்ப் பணத்தில் விருந்து செலவுத் தொகை போக மீதியிருந்த ரூ.31,64,171-ஐ ஒரு வெள்ளைத்துண்டில் வைத்துக்கட்டி அப்படியே சிவன் கோயில் திருப்பணிக்குழுவினரிடம் கொடுத்தனர். இதைப் பார்த்த அனைவரும் நெகிழ்ந்து பாலவேலாயுதம் குடும்பத்தினருக்கு நன்றி கூறியுள்ளனர்.
இது குறித்து பாலவேலாயுதம் மகன் லிங்கேஸ்வரன் கூறுகையில், “எங்கள் குடும்பம் சிவபக்தியான குடும்பம். பாட்டியும், அப்பாவும் கைலாயம் வரை போய்வந்தவர்கள். எங்கள் ஊரில் உள்ள சிவாலயம் திருப்பணி தொடங்கி மூன்று ஆண்டுகளாக நடக்கிறது. ஏற்கனவே எங்கள் அப்பா ரூ.16 லட்சம் கொடுத்திருந்தார்.
இப்ப மொய் விருந்து வைக்க ஏற்பாடு நடக்கும்போதே மொய்ப்பணம் முழுமையாக கொடுப்போம் என்றார். எங்கள் பாட்டி உள்பட குடும்பத்தினர் அனைவரும் சரி என்றோம். அதன்படி மொய் வசூல் ரூ.32 லட்சத்தில் விருந்து செலவு போக மீதியுள்ள ரூ.31,64,171-ஐ எங்கள் குடும்பத்தினர் திருப்பணிக்குழுவிடம் கொடுத்தோம். இதற்கு முன்பு நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் கொடுத்திருந்தோம்” என்றார்.
இதையும் படிங்க...ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா