முன்பெல்லாம் குழந்தைகள் ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாடுவர். அப்படி விளையாடும்போது உடல் வலுவடைவதுடன் மனமும் புத்துணர்வுப் பெற்று சிந்திக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.
ஆனால் தற்போது அந்தக் காலங்கள் எல்லாம் வரலாறு ஆகிவிட்டன. குறிப்பாக பச்சக்குதிரை, கண்ணாமூச்சி, கால்தாண்டி, பல்லாங்குழி, தாயம், நொண்டி, பரமபதம், கிட்டிப்புல், புட்டு கோலிகுண்டு, பம்பரம், நூத்தாங்குச்சி, கிச்சுகிச்சுதாம்பலம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற குழந்தைகளின் உடலுக்கும் மனதிற்கும் வலிமை அளிக்கக்கூடிய விளையாட்டுகளை எல்லாம் இருந்தன.
ஆனால், இப்போது உள்ள குழந்தைகள் தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் விரும்புவது மொபைல் போனைத்தான். இதில் குழந்தைகள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது மொபைலுக்கு அடிமையாகிவிட்டனர்.
அப்படி என்னதான் இருக்கு அந்த மொபைலில் என்று ஆத்திரத்தோடு குழந்தைகளிடம் கேள்வி கேட்கிறோமே தவிர, அதிலிருந்து மீளுவதற்கான வழியை நாம் கண்டறிய முற்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே பணிக்குச் சென்றுவருகின்றனர்.
குழந்தைகள் பள்ளி முடிந்ததும் சரி, விடுமுறை நாள்களிலும் சரி தனியாகவே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு துணையாக இருப்பது மொபைல் போன் மட்டுமே. இதனால் மொபைல் போனை விட்டு பிரியாது இருக்கவே ஆசைப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி கண்கள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன், பேச்சின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒரு சில சமயங்களில் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்படுகின்றனர்.
இதில் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் சிறார் நீதி குழுமத்தில் 80 விழுக்காடு பிரச்னைகள் குழந்தைகள் மொபைல் போனை திருடிவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மனநல ஆலோசனைக்கு அழைத்துவரப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போனின் மோகம் குழந்தைகளுக்கு அதிகமாகிவிட்டது.
சிறார் நீதிச் சட்டமானது இதுபோல திருட்டில் ஈடுபடும் குழந்தைகளை குற்றவாளி எனக் கருதாமல் அவர்களின் மனநிலையை செம்மைப்படுத்தும் ஆலோசனை வழங்குவதை வழிவகை செய்கிறது. என்னதான் தொழில்நுட்பத்திற்கு நேர்மறையான விஷயங்களைப் புகட்டினாலும் குழந்தைகளுக்கு மொபைல்போன் என்பது தவறாகத்தான் முடிகிறது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கூறுகையில், “ஒரு குழந்தை சரியான வழியில் சென்றாலும் சரி, தவறான வழியில் சென்றாலும் சரி அதற்குக் காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்களாகத்தான் இருக்க முடியும்.
தனது தாயும், தந்தையும் பேசும் சொற்களை கவனித்து அவர்களின் செய்கைகளை கடைப்பிடித்துதான் ஒரு குழந்தை வளர்கிறது. பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த நாட்டின் சூழ்நிலையில் சம்பாதிக்க வேண்டுமென குழந்தைகளின் மனநிலையைப் பற்றி யோசிக்காமல் அவர்களைத் தனிமையில் விட்டுச்சென்று-விடுகின்றனர்.
அவர்கள் தங்களுக்குத் துணையாக மொபைல் போனை கையில் எடுத்துவிடுகின்றனர். பப்ஜி, டிக் டாக், யூ-ட்யூப், ஃபேஸ்புக், கார்ட்டூன் படம், இன்னும் பல்வேறு செயலிகளை நான்கு வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர்.
ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதால் உடல் பருமன், மொபைல் போனிலிருந்து வரும் வெளிச்சம் கண்களுக்கான பாதிப்பு, மேலும் மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளை குழந்தைகளுக்கு இந்த மொபைல்போன் ஏற்படுத்திவிடுகிறது.
குழந்தைகள் எதிர்பார்ப்பது தம்மிடம் யாரேனும் பேச வேண்டும், கொஞ்ச வேண்டும், விளையாட வேண்டும் என்பதுதான். அதனை அவர்களுக்கு கொடுத்துவிட்டாலே நிச்சயம் மொபைல்போனுக்கு அடிமையாக மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!