மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவிட்-19 சிறப்பு மருத்துவமனைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு அதிநவீன கட்டடம் இன்று கோவிட்-19 சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனை 250 படுக்கை வசதிகளுடன், முதற்கட்டமாக 100 ஆக்ஸினேசன் படுக்கை வசதியுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் மருத்துவமணைனை போன்று எல்லா இடங்களிலும் கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவமனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை உருவாக்கி வருகிறது. இதேபோன்று படுக்கை வசதி, ஆக்ஸினேசன் போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் நேற்றைய தினம் வரை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சையால் கரோனா தொற்றிலிருந்து பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் இறப்பு விகிதம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சைகென தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் கரோனா சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. இதனை மீறி சென்னையில் கூடுதலாக சிகிச்சைக்கு பணம் வசூல் செய்த ஒரு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 90 சதவீதம் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கரோனா வைரஸை குணப்படுத்த விலையுயர்ந்த மருந்துகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸினேசன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேத, ஹேமியோபதி மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவப்பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்படி அனைத்து மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிவதுடன், சமூகஇடைவெளியை கடைபிடித்து கரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.