புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் தனலட்சுமி (20). இவரைக் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
அதன் பிறகு சிலட்டூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்த இவர், தற்போது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமியின் வீட்டின் அருகே சுரேஷ் அடிக்கடி சென்றுவந்ததால், அவரின் மீது தனலட்சுமியின் சகோதரர் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷ் இல்லாதபோது அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது தன் தங்கை தனலட்சுமி வாயில் துணி கட்டியபடி கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தங்கை தனலட்சுமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதையடுத்து சுரேஷ் மீது காவல் துறையினர் s363, 342, 376(ii)Ipc ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர்களிடம் காவல் துறையினர் கேட்டபோது, பதில் கூற மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: